வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வணக்கம் அன்பர்களே!

உலகெங்கிலும் உள்ள கவிப்பேரரசு அவர்களின் வாசகர்கள் ஒன்று கூடி மகிழவும் ,கவிப்பேரரசு அவர்களின் படைப்புகள், படைப்புகளின் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், ஆராய்ச்சிகள் என விரியும் இலக்கிய தேடல்களுக்குமான வலைத்தளம் இது.

வெறும் பிரபலப்  பாடலாசிரியர் என்று  ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மாயத்திரை விலக்கி, அவரது பன்முகப் பரிமாணத்தை, இலக்கியத்தின் மகத்துவத்தை,மனிதநேய மாண்பை, உழைப்பால் உயர்ந்த தனிமனித  ஆளுமைத் திறனை உலகெங்கும் எடுத்துச் செல்வதன் மூலம் , வரும் தலைமுறைகளுக்கு இந்த  வழிகாட்டி ஆளுமையை அறிமுகம் செய்து வைப்பதை எமது கடமையாய்க் கருதுகிறோம்.

கவிப்பேரரசு அவர்களின் படைப்புகளை பாரறியச் செய்து, அவை உலகின் எந்த மொழிப் படைப்புகளோடும் போட்டியிட்டு வெல்லக் கூடியவை என்பதை பறைசாற்றுவதே எமது நோக்கம்.

கவிப்பேரரசு படைப்புகள் மீதான விமர்சனங்கள், விவாதங்கள் , தனிநபர்  திறனாய்வுகள் , பல்கலைக்கழக ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், அம்முயற்சிகள்  ஒரே இடத்தில் தேங்க விடாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்ல இவ்வலைத் தளம் உறுதுணையாய் இருக்கும்.

தமிழின் தவப்புதல்வரின், இந்நூற்றாண்டின் இணையற்ற மனிதரின் புகைப்படங்கள்,ஒலி/ஒளிக் கோப்புகள் மற்றும் ஊடகச் செய்திகள் போன்றவற்றை இணையத்தில் பாதுகாக்கும் இணைய ஆவணக் காப்பகமாகவும் இந்த வலைத் தளம் செயல்படும்.

தமிழிணையத்தின் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவான் மூலம் இணையத் தமிழ் வளர்ச்சிக்கும் இவ்வலைத்தளம் முக்கியப் பங்காற்றும்.

இவ்வலைத் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெற, கவிப்பேரரசின் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.



 


செய்திக் கீற்று

 

சினிமா என்பது விடுகதை வைரமுத்து பேச்சு!

ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் பேராண்மை. வித்யாசாகர் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதி உள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் வெளியிட, சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பெற்றார்.

விழாவில் வைரமுத்து பேசியதாவது:

திரையுலகில் வெற்றிதான் மூலதனம். நான் பாடல் எழுதிய படமாக இருந்தாலும், எழுதாத படமாக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவேன். எங்கோ ஓர் இடத்தில் மழை பெய்தால்தான் எங்கோ இருக்கும் அணை நிரம்பி, அங்குள்ளவனுக்கு பசியாற உணவு கிடைக்கிறது.

எந்த படம் வெற்றி பெற்றாலும் அது இன்னொரு படத்துக்கு பயனுள்ளதாக அமையும். இப்படத்தின் இயக்குனர் ஜனநாதன் ஆறு சொன்னால் நூறு செய்வார். மெட்டுக்கு பாட்டு எழுதினாலும் அது மில்லிமீட்டர் சுத்தமாக பொருந்த வேண்டும். இப்படத்தில் அப்படி பொருந்தி இருக்கிறது. குத்துபாடல்களுக்கு மத்தியில் நல்ல பாடல்களுக்கும் இடம் தர வேண்டும். கண்ணதாசனும் குத்து பாடல் எழுதி இருக்கிறார். நானும் எழுதி இருக்கிறேன். ஆனால் எல்லாமே குத்துபாடல் கிடையாது. ஒரு படத்தில் பத்து பாடல் இருந்தால் அதில் ஒரு பாடல் குத்து பாடலாக இருக்கலாம். பத்து பாடல்களும் குத்துப் பாடலாக இருந்தால் எல்லாமே வெத்துப்பாடல்களாகி விடும். சினிமா என்பது விடுகதை. அதில் விடை பெற்றவர்கள் சிலர்தான். இப்படத்துக்கு பேராண்மை என்று பெயரிட்டிருக்கிறார்கள். வள்ளுவன் சொன்ன வார்த்தை. பேருக்கு ஏற்றபடி நாயகன் ஜெயம் ரவி கட்டுகோப்புடன் இருக்கிறார். இவ்வாறு வைரமுத்து பேசினார்.